Tree Worship
*நிம்ரோது என்பவன் கர்த்தருக்கு முன்பாக பலத்த வேட்டைக்காரனாயிருந்தான், பாபேல், ஏரேக், அக்தாத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்ஜியத்திற்கு ஆதி ஸ்தானங்கள்* என்று ஆதியாகமம் 10:9,10ல் வாசிக்கிறோம். மனிதனே உலகை ஆளவேண்டும் என்ற நோக்குடன் *வீடுகள், அங்காடிகள், அலுவலகங்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றை உள்ளடக்கி கூம்பு வடிவ கட்டுமானமாக* அதாவது கோபுரத்தின் உச்சி பகுதி இறைவன் இருக்கும் உயர் ஸ்தானத்தில் அமைய வேண்டும் அந்த உச்சியில் மனிதன் ஆளும் தனது ஆசனத்தை அமைக்க வேண்டும் என்ற நோக்குடன் கட்ட ஆரம்பிக்கப்பட்ட கோபுரமே பாபேல் கோபுரம். இதைக் கட்டியவன் நிம்ரோது. மனிதன் இறைவனின் ஸ்தானத்திற்கு முயற்சி செய்யக் கூடாது என்பதை உலகத்தோர் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்குடன் நிம்ரோதை துண்டு துண்டாக வெட்டி உலகின் எல்லையெங்கிலும் அனுப்பினார்கள் என்றும் இதில் *நிம்ரோதின் உற்பத்தியுறுப்பு மட்டும்* காணாமற்போயிற்று என்பதும் பாபிலோனிய பாரம்பரியம்.
அவ்வாறு வெட்டப்படும் பொழுது சிதறிய இரத்தம், பாதியாக வெட்டப்பட்டுக் காய்ந்து போயிருந்த மரத்தின் மீது தெளிக்கையில் மரம் மறுஉயிர் அடைந்து தளிர்த்து விட்டதாகவும் நிம்ரோது மீண்டும் மரவடிவில் உயிர்த்தெழுந்து விட்டதாகவும் அவனது *தாய் என்றும் மனைவி என்றும்* அழைக்கப்பட்ட செமரிஸ்டர் கோரினாள்.
இதனடிப்படையில் பாபிலோனிலே பனிக்காலத்தில் மரங்கள் இலைகளை இழந்து மீண்டும் துளிர்க்க ஆரம்பிக்கும்பொழுது, வெட்டி நட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்ட மரங்களில் பரிசுகளை கட்டிவைத்து நிம்ரோதை நினைவு கூர்ந்து கொண்டாடினர். நாளடைவில் நிம்ரோதுதான் பரிசுகளை மரத்தில் கட்டி வைக்கிறான் என்று வழங்களாயிற்று.
இதைத்தான் தீர்க்கன் எரேமியா(10:3-5,9) ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒருமரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும். வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள் அவைகள் பனையைப் போல் நெட்டையாய் நிற்கிறது. அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும்
இளநீலமும் இரத்தாம்பரமும் (கருஞ்சிவப்பு) அவைகளின் உடுமானம் என்கிறார்.
மேலேயுள்ள படத்தில் ஏதேன் தோட்டத்தின் பாவத்திற்கும், தோட்டத்தில் நடுவில் இருக்கிற விருட்சத்திற்கும், இன்று நாம் வழிபடும் கிறிஸ்துமஸ் மரத்திற்கும் உள்ள தொடர்பை உற்று நோக்குங்கள்.
விருட்சத்தின் கனிகளும்: கருஞ்சிவப்பு, பொன் நிற உருண்டைகளும்,
வெள்ளி நிற மணிகளும்.
மரத்தைச் சுற்றியுள்ள சர்ப்பமாகிய சாத்தானும்: இன்று நாம் மரத்தைச் சுற்றிப் போட்டுள்ள மணிமாலையும் உங்கள் கண்ணை நெருடவில்லையா?
மேலே கூறப்பட்டுள்ள கூம்பு வடிவ பாபேல் கோபுரமே எகிப்தில் வழங்கப்பட்ட பிரமீது கட்டுமானம்.இஸ்ரவேல் மக்கள் தங்களை ஆளுவதற்கு மனித அரசர் வேண்டும் என்று இறைவனை புறக்கணித்ததே (1 சாமுவேல் 8:5) இஸ்ரவேல் மக்கள் புறஜாதிகளுடைய கூம்பு மார்க்கத்தைக் கற்றுக் கொண்டது. உலகை மனிதன் ஆள வேண்டும் என்ற கூம்பு கொள்கையை அனைவர் மனதிலும் ஏற்புடையதாக்க வேண்டும் என்ற *நஞ்சு விதைப்பே கூம்பு வடிவ கிறிஸ்துமஸ் மரம்.*
திருமணத்திற்கு பொருளாதாரமில்லாமல் கஷ்டப்பட்ட மூன்று சகோதரிகள் தங்களது வீட்டின் அடுப்பங்கரையில் ஜெபித்துக் கொண்டிருந்த பொழுது அதனை உற்றுக் கேட்ட செயின்ட் நிக்கோலஸ் என்ற *ரோமானிய பாதிரியார்* புகைக் கூண்டு வழியாக திருமணத்திற்கான பொருட்களை போட்டுச் சென்றார். இதேப் போன்று அநேகர் கிறிஸ்துமஸ் காலங்களில் செயின்ட் நிக்கோலஸ் வேடமணிந்து உதவிகள் செய்தனர்.தேவையிலிருப்போருக்கு உதவ வேண்டும் என்பதை திருச்சபை கற்றுக் கொடுத்தது. நாளடைவில் செயின்ட் நிக்கோலஸ் என்பது ஷேன்டாகிளாஸாக மருவியது. அவ்வாறே குழந்தைகள் இறைவனை நோக்கி வேண்டுவதற்குப் பதிலாக இந்த கிறிஸ்துமஸில் ஷேன்டாகிளாஸ் எனக்கு இதைத் தரவேண்டும், அதைத் தரவேண்டும் என்று தங்களது விசுவாசத்தை ஷேன்டாகிளாஸ் மேல் வைக்க ஆரம்பித்தனர். அடுத்த தலைமுறையினரின் கிறிஸ்துமஸ் குறித்த அபிப்பிராயம் ஷேன்டாகிளாஸ் மற்றும் கிறிஸ்துமஸ் மரமானது.
அப்பொழுது ஸ்திரியானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு…. என்று (ஆதியாகமம் 3:6) வாசிக்கிறபடி, *கனியை விட அவள் விருட்சத்தை இச்சித்ததின் மெய்ப் பொருளை நீங்கள் உணர்ந்து கொள்ள பரிசுத்தாவியானவர் உதவி செய்யட்டும்.*
*சமாதானம் ஓதும் இயேசு கிறிஸ்து இவர்தாம்! இவர்தாம்! இவரேதாம்! என்று நாங்கள் கீதபவனியில் வாழ்த்துக்கள் கூறியபொழுது கிறிஸ்துமஸ் தாத்தாவின் காலில் விழுந்து வணங்கிய புதிய விசுவாசியின் மனநிலையும் நமது குழந்தைகளின் மனநிலையும் ஒன்றேதான் என்பதை உங்களால் ஒத்துக் கொள்ள முடிகிறதா?*
இயேசுவை சிறு கைப்பொம்மையாக கிடத்திவிட்டு தாத்தாவும், மரமும் வானோங்கி நிற்பது அலங்காரமா? அலங்கோலமா?
சாஸ்திரிகள் கண்டு பரிசளித்தது இரண்டு வயதுடைய இயேசுவிற்கு, மாட்டுத்தொழுவத்திலல்ல!
வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள்.
மத்தேயு 2:11.
பிறந்தது கிறிஸ்து! இதில் தாத்தாவின் காரியமென்ன?
கிறிஸ்துமஸ் மரம் எந்த வகையில் பக்திவினையத்தை உருவாக்குகிறது?
*புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளாதிருங்கள்* - எரேமியா 10:2.

Comments
Post a Comment